டில்லி

பாஜக வேட்பாளர் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இரு வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டில்லி பகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  வரும் மே மாதம் 12 ஆம் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் கவுதம் கம்பீரை எதிர்த்து ஆம் ஆத்மியின் பெண் வேட்பாளரான அதிஷி போட்டி இடுகிறார்.

அதிஷி

அதிஷி டில்லி மாநில கல்வி அமைச்சரான மனீஷ் சிசோடியாவின் ஆலோசகராக சென்ற வருடம் வரை பணி புரிந்து வந்தார். கடந்த 2015 ஆம் வருட தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அமைப்பதில் அதிஷி பெரும் பங்கு வகித்துள்ளார். இவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர் ஆவார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மீது புகார் அளித்துள்ளார். கவுதம் கம்பீர் டில்லியில் உள்ள கரோல் பாக் மற்றும் ராஜிந்தர் நகர் ஆகிய இரு இடங்களிலும் தம்மை வாக்காளராக பதிந்துள்ளதாகவும் அதனால் இரு அடையாள அட்டைகள் வைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து கவுதம் கம்பீர் இதுவரை விளக்கம் தெரிவிக்கவில்லை.