சென்னை:

ங்க கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற தாகவும் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து துறைமுகங்களில் 1ம் என் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம்:

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னைக்கு தென்கிழக்கில் 1490 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் அதற்கு அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரும் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் தீவிரப் புயலாக வலுவடைந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை நெருங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழக துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நெருங்கும் என  சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

புயல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்,  நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருந்து தென்கிழக்கே சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும். தற்போது உள்ள நிலவரப்படி ஃபனி புயல் ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழக கடற்கரைக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மீனவர்கள் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 28 முதல் 30ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என  எச்சரிக்கப்படுகிறார்கள். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தவர், கோடை காலத்தை பொருத்தவரை இதற்கு முன்னர் 1966ஆம் ஆண்டு ஒரு புயல் கடலூர் அருகே கரையை கடந்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த  2010 மற்றும் 2016ம் ஆண்டுகளில் லைலா மற்றும் ரோனோ ஆகிய புயல்கள் கரைக்கு அருகே வந்தன. ஆனால் கரையை கடக்கவில்லை என்று கூறியவர்,  அதன் மூலமாக மழை மட்டுமே நமக்கு  கிடைத்திருக்கிறது என்று கூறினார்.

ஒவ்வொரு புயலும் ஒரு விதமானது என்று கூறிய பாலச்சந்திரன்,  காற்றழுத்த மண்டலத்தில் ஏற்படும் மாறுபாடுகளை பொருத்து புயலின் நகர்வு அமையும், அதை வைத்து நமக்கு காற்றோ அல்லது மழையோ கிடைக்கும் என்பதை அறிய முடியும்.  தற்போது தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல்சீற்றம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து,  நாகை, புதுச்சேரி, கடலூர், பாம்பன் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.