அகமதாபாத்:
தனது வாக்கை பதிவு செய்த பிரதமர் மோடி, வாக்காளர் அடையாள அட்டை, வெடிகுண்டைவிட வலிமையானது: வாக்களித்தபின் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 116 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இன்றைய வாக்குப்பதிவின்போது முக்கியமான ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர், உ.பி. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் தொகுதிகள் முக்கியத்துவம்வாய்ந்தவை.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகரில் ஓட்டு போட வந்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார் அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தனது வாக்கினை பதிவு செய்ய அஹமதாபாத் வந்தனர் அங்கு ரெனிப் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்து வாக்கினை பதிவு செய்தனர்.
வாக்களித்த பின் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இன்று காலை முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கும்பாபிஷேகத்தில் புனித நீரால் தூய்மை அடைவது போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின் நீங்கள் தூய்மையானவராக உணருவீர்கள்.
பயங்கரவாதிகளுக்கு ஆயுதமாக வெடிகுண்டு உள்ளது. ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். எனவே நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணருங்கள்”
இவ்வாறு கூறினார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி முதல்கட்டமாக தேரதல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்தது. இரண்டாம் கட்டமாக கடந்த 18ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
தற்போது 3வது கட்டமாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், திரிபுரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.
இங்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.