நாகர்கோவில்:

டந்த 18ந்தேதி தமிழகதில் வாக்குப்பதிவு நடைபெற்று  முடிந்த நிலையில், அங்குள்ள சுமார் 40ஆயிரம் வாக்காளர்கள் பெயர்  நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அந்த பகுதி வாக்குகளை எண்ணக்கூடாது என குமரி மாவட்ட மீனவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மீனவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வசதியாக வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என அந்த மனுவில்  மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18ம்தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது.  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்களில் 10 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் வாக்களித்துள்ளனர். இது, 69.80 சதவீதமாகும்.  இந்த வாக்குப்பதிவின்போது, ஏராளமானோர் பெயர் வாக்காளர்  பட்டியலில் இல்லாததால், பரபரப்பு நிலவியது. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோரின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறி, அதிகாரிக ளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அதுபோல,  மக்கள் பாதை என்ற அமைப்பினர் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மனு அளித்துள்ளனர்.

இவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், “கடந்த 18ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் பல்லாயிரம் பேர் வாக்கு அளிக்க முடியவில்லை. விடுபட்ட அனைவரும் வாக்கு அளிக்க, வேறொரு நாளில் ஓட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் தமிழக தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஜனாதிபதி உள்ளிடோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.