டில்லி
என்னிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டால் நான் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரும் உத்திரப் பிரதேச மாநிலம் கிழக்குப் பகுதியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய தாய் சோனியா காந்தி உத்திரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டி இடுகிறார். சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டி இடுகிறார்.
பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதனால் அவர் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி இடுவார் என ஊகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளர் யார் என அறிவிக்காமல் உள்ளது. இது ஊகத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரசாரம் செய்ய பிரியங்கா காந்தி வயநாடு சென்ற போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிட உள்ளாரா என கேள்வி எழுப்பப் பட்டது. அப்போது பிரியங்கா காந்தி, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை வாரணாசியில் போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டால் நான் மகிழ்வுடன் போட்டியிடுவேன்” என தெரிவித்துள்ளார்.