மதுரை:
மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்.
தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, அலைகடலென திரண்ட பக்தர்கள் வெள்ளத்தில்,இன்று காலை 5.50 மணியளவில் எழுந்தருளினார்.
மதுரை சித்திரைத்திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 15ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. அதைத்தொடர்ந்து16ந்தி திக்கு விஜயமும், 18ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது.
அதைதொடர்ந்து நேற்று (18ந்தேதி) லட்சக்கணக்கானோர் திரண்ட தேரோட்டம் வெகு விமரிசையாக நடை பெற்றது. அதைத்தொடர்ந்து. நேற்று மாலை கள்ளழகர் தங்கக்குதிரையில் அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.
மதுரை அருகே உள்ள மூன்று மாவடியில் நேற்று (ஏப்.18) காலை 6 மணிக்கு எதிர்சேவை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மாநகராட்சி மைய மண்டபத்தில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடா ஜலபதி கோயிலில் நேற்று இரவு 9:30 மணிக்கு மேல் பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதையடுத்து, தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை(ஏப்.,19) 2:30 மணியளவில் கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 5.50 மணியளவில் எழுந்தருளினார்.
கோவிந்தா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர்.
முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.
சித்திரை திருவிழாவின் சிறப்புமிக்க நிகழ்வாக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியதை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்தனர். பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.