மதுரை:

அலை கடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில்  மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மக்கள் கூட்டத்தில் தேர் அசைந்தாடி வந்த அழகே… அழகு.

பாரம்பரியம் மிக்க மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில்இருந்து லட்சக்கணக்கானோர் மதுரை  சித்திரை தேரோட்டத்தில் கலந்து மக்கள் மதுரை மீனாட்சியின் அருளை பெற்றனர்.

தமிழகத்தில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், இன்று  சித்ரா பவுர்ணமி மற்றும் சித்திரை திருவிழா நடப்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மக்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள், தங்களது வாக்குகள் பதிவை தவிர்த்து தேரோட்டத்தில் கலந்துகொண்டனர் அம்மனின் அருள் பெற்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இன்று  11-ம் நாள் திருவிழாவையொட்டி, பாரம்பரியமிக்க  தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலிருந்தே தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் மதுரையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். வாக்குப்பதிவை மறந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரரை காண மதுரையில் திரண்டனர்.

இன்று காலை 5:30 மணிக்கு கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து  தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 5 :45 மணிக்கு மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

முதலில் சுவாமி சுந்தரேசுவரர் , பிரியாவிடையுடன், உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.  அதையடுத்து,  பெரிய தேர் எனப்படும் சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில், மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பக்தர்களுக்கு  ஆங்காங்கே உபயதாரர்கள் தண்ணீர், மோர் மற்றும் உணவு வழங்கினர். லட்சக்கணக்கானோர் மதுரையில் திரண்டதால், மதுரையே மக்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது.

சித்திரை தேரோட்டம்.. வீடியோ…