டில்லி

ஜெட் ஏர்வேஸ் தற்போது சேவைகளை குறைத்துள்ளதால் அந்த இடத்தை பிடிக்க போட்டி நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

ஜெட் ஏர்வேஸ் கடும் நஷ்டத்தில் இயங்குவதால் ஊழியர்களின் ஊதிய பாக்கி, கடன் தவணைத்தொகை, நிர்வாக செலவுகள் ஆகியவற்றுக்கு போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாக செலவுகளை குறைக்க பல விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் சங்கம் தங்களுக்கு ஊதியத்துக்கான நிதி உதவி அளிக்க அந்நிறுவனத்துக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களாக உள்ளன. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சேவைகளை ரத்து செய்துள்ளதால் அந்த சேவைகளை கைப்பற்ற இந்த இரு நிறுவனங்களும் முயன்று வருகின்றன. இதனால் இரு நிறுவனங்களும் மேலும் பல விமானங்களை பணியில் அமர்த்த திட்டம் இட்டுள்ளன.

இந்தியாவின் மிகவும் குறைவான கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய்சிங், “கடந்த வாரம் நாங்கள் எங்கள் சேவையில் பி 7373 விமானங்கள் 16 ஐ சேர்த்துள்ளோம். தற்போது வாடிக்கையாளர்களின் சவுகரியத்துக்காக மேலும் ஐந்து கியூ 400 விமானங்களை சேர்க்க உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, “வரும் மே மாதம் முதல் மும்பையில் இருந்து 10 கூடுதல் விமானங்களையும் டில்லியில் இருந்து 8 கூடுதல் விமானங்களையும் இயக்க உள்ளோம். இந்த விமானங்கள் ஏற்கனவே உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுடன் இணைந்து இயங்கும்” என தெரிவித்துள்ளது.

தற்போது ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை ரத்து செய்து வருவதால் பல பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் விமான கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த இரு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை அதிகரிப்பதால் பயணிகளுக்கு சிரமம் இருக்காது எனவும் கட்டணம் அதிகரிக்காது எனவும் கூறப்படுகிறது.