வாஷிங்டன்: இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் மறறும் 20 லட்சம் செவிலியர்கள் ஆகியோருக்குப் பற்றாக்குறை நிலவுகிறது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது; ஆன்டிபயோடிக் மருந்துகளை முறையாக கையாளத் தெரிந்த மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையால், பல நோயாளிகள் தங்களின் வாழ்வை இழக்கிறார்கள். ஆன்டிபயோடிக் மருந்துகள் எப்போதும் கிடைத்தாலும், அதன் அதிக விலைப் பிரச்சினையால், பல நோயாளிகள் அவற்றை வாங்க முடியாத சூழலில் இருக்கிறார்கள்.

அரசினால், மருத்துவ சேவைகளுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதே இதற்கு காரணம். இந்தியாவில், நிகழும் 65% மருத்துவச் செலவுகள் தாக்குப்பிடிக்க முடியாதவையாக உள்ளன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 57 மில்லியன் மக்கள் மருத்துவ செலவினால் கடனாளியாக மாறுகிறார்கள்.

உலகெங்கிலும், ஆன்டிபயோடிக் மருந்தின்மையால் ஒவ்வொரு ஆண்டிலும் நிகழும் 5.7 மில்லியன் மரணங்களில், மிகப் பெரும்பாலானவை மிகக்குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில்தான் நிகழ்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி