சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கி உள்ளது. இதன் காலமாக மீன் விலை உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடலில் இப்போது பிடிக்கப்படும் மீன்களில் கரு முட்டை உள்ளதால் மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 15 முதல் கிழக்கு கடலோரப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான 60 நாட்கள் விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் முன்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக ஆந்திரா, ஒரிசா, கொல்கத்தா, மும்பை, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால், வழக்கமான விலையை விட கிலோவுக்கு ரூ.100 முதல் 200 வரை அதிகமாகி விட்டது.
தற்போது ஏரி மீன்களும், வளர்ப்பு மீன்களும் மார்க்கெட்டுக்கு வருவதால் விலை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. அடுத்த மாதம் இன்னும் அதிகரிக்கும்.
மீன்பிடி தடைகாலத்தையொட்டி, சென்னை நீலாங்கரை முதல் குமரி மாவட்டம் குளச்சல் வரையிலான கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மொத்தம் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 300 க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில் மீனவர்கள் படகுகள், வலைகள் மற்றும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைகாலங்களில் அரசு மீனவ குடும்பத்திற்கு வழங்கும் நிவாரணம் 5 ஆயிரம் ரூபாயை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர் களும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.