சேலம்:

சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை நிச்சயம் நிறைவேறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நிதின் கட்கரி உறுதியளித்தார்.


சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும், பா.ம.க தலைவர் ராமதாஸூம் கலந்து கொண்டார்கள்.

அப்போது நிதின் கட்கரி பேசியதாவது:

கோதாவரியிலிருந்து 1,100 டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கோதாவரி -கிருஷ்ணா நதி நீர் இணைப்பு மேற்கொண்டோம். அடுத்து கோதாவரி -காவிரி நதி இணைப்பை 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் தொடங்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கு நீர், மின்சாரம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதிகள் கிடைக்க வேண்டும்.

முதல்வரால் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிரதமரும், அவருடைய அமைச்சரவையும் அனைத்து உதவிகளும் செய்கின்றனர்.
நமது கூட்டணி மிக பொருத்தமான கூட்டணியாக அமைந்திருக்கிறது.

சேலம் – சென்னை 8 வழி பசுமைச் சாலை இப் பகுதியின் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கொடுக்கப்படும். விவசாயிகளிடம் கலந்து பேசி இத்திட்டத்தை செயல்படுத்துவோம்.

இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மிகுந்த அக்கறைக் காட்டி வருகிறார். இந்த பசுமை வழிச் சாலை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.