சென்னை:
சிலைக்கடத்தில் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொன். மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணையில், பணி ஒய்வு பெற்ற பொன். மாணிக்கவேலை அதிகாரியாக நியமித்ததற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக அரசின் அனுமதியின்றி உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறினார்.
தமிழக அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் செயல்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் குறிப்பிட்ட வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு வேண்டுமானால் நீதிமன்றம் அதிகாரியை நியமிக்கலாம். வழக்கு தொடர்பான சரியான ஆய்வுகள் இல்லாமல் பொன் மாணிக்கவேல் செயல்படுபவராக இருப்பதால் அவரை எதிர்க்கிறோம் என்று கடுமையாக குற்றம் சுமத்தியது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கைப் பொருத்தவரை அதிகாரி பொன் மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா என்பதை நாங்கள் பார்க்கப் போவதில்லை. அவரது நியமனம் சரியா, தவறா? என்பதை மட்டுமே பார்க்கப்போகிறோம்” என்று கூறியிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கன்வில்கர், கே.எம்.ஜோசப் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது.