திருவனந்தபுரம்:
ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய திருச்சூர் கலெக்டருக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய ராஜ்யசபை எம்பியும் நடிகருமான சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.
ஐயப்பன் பெயரை சொல்லி வாக்கு கேட்டதன் மூலம் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிவிட்டதாகக் கூறி, சுரேஷ் கோபியிடம் விளக்கம் கேட்டு திருச்சூர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அனுபமா நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சுரேஷ் கோபிக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியது முட்டாள்தனமான செயல். அவர் சிபிஎம் ஆட்சியின் அலுவலராக இருப்பதாலோ அல்லது பிரபலமாக வேண்டும என்பதற்காக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் நன்னடத்தை விதி மீறல் என்ன என்பதை முதலில் கலெக்டர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து பதில் அளித்த சுரேஷ் கோபி, “என் ஐயன், நம் ஐயன் பெயரை சொல்வது தவறா? ஐயன் என் உணர்ச்சி. சபரிமலை விவகாரத்தை நான் வாக்கு கேட்க பயன்படுத்தவில்லை” என்றார்.
இதற்கிடையே, கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் நன்னடத்தை விதிகளை நன்கு அறிந்தே கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவருக்கு அரசியல்கட்சிகள் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.