ஈரோடு:

நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டது அதிமுக ஆட்சி என்றும், நீட் தேர்வு ரத்தாகும் என்று சொன்ன ராகுலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  ஸ்டாலின் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், ஈரோட்டில் திமுக கூட்டணியை சேர்ந்த மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்பபோது, திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது என்று கூறினார். மேலும்,  நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டது அதிமுக ஆட்சி என்று கடுமையாக சாடியவர், பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தின் நிலை என்ன ? என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு ரத்தாகும் என்று  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த ராகுலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அனிதா மரணத்திற்கு நியாயம் கிடைக்கும்  என்றும் ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,  கேபிள் டிவி கட்டணம் முந்தய அளவிற்கு  குறைக்கப்படும் என்றவர்,  திருச்சி , மதுரை , கோவை , சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும், பயிர் கடன் , மாணவர்களின் கல்விக் கடன் முழுமை யாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திமுக தலைவர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவ தாக குற்றம் சாட்டியவர், சந்தேகம் வந்தால் காவல்துறை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யுங்கள் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் விடுத்தார்.

வேலூரில் நடைபெற்ற ரெய்டு காரணமாக,  ஆம்பூர் , குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்திவிட்டால் ஆட்சி கலையாது என ஆட்சியாளர்கள் கனவு காண்கிறார்கள் அவர்களின் கனவு நிறைவேறாது என்றும், தமிழகத்தில் விரைவில் திமுக அரியணை ஏறும் என்றும் கூறினார்.