பெங்களூர்
வரும் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்களிப்பை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் வரும் 18 ஆம் தேதி அன்று முதல் கட்ட வாக்களிப்பு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 18 ஆம் தேதி அன்று 14 தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பெங்களூர் நகரில் உள்ள தொகுதிகளும் அடங்கும். பெங்களூரு நகரில் வாக்குப்பதிவு சதவிகிதம் எப்போதுமே குறைவாகவே இருந்து வருகிறது.
இவ்வாறு வாக்குப் பதிவு குறைவதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்கள் வாக்களிப்பு தினத்தன்று ஏதேனும் சுற்றுலா தலங்கள் சென்று விடுவதாகும். கர்நாடகா மாநிலம் அதிக அளவில் சுற்றுலாத் தலங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். இந்த முறை வாக்களிப்பு சதவிகிதத்தை அதிகப்படுத்த அரசு முயன்று வருகிறது.
அதனால் அனைத்து சுற்றுலா தலங்களில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் வாக்களிப்பு சமயத்தில் முன்பதிவை அரசு உத்தரவுப்படி ரத்து செய்துள்ளன. ஒரு சில இடங்களில் முன் பதிவு செய்ய வாக்காளர் அட்டை கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. வாக்காளர் அட்டை முகவரி மூலம் அந்த அட்டைதாரரின் வாக்களிப்பு தினத்தன்று எந்த ஒரு சுற்றுலா தல விடுதியிலும் முன்பதிவு செய்ய முடியாது.
இது குறித்து விடுதி உரிமையாளரான சந்தோஷ் என்பவர், “வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பில் பங்கேற்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்து. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். அவர்கள் இந்த தேதிக்கு முன்போ அல்லது பின்போ கூடுதல் கட்டணமின்றி மாற்றிக்கொள்ளலாம்.
அப்படி இல்லை எனில் அவர்கள் செலுத்திய முன்பணம் முழுவதுமாக திருப்பி அளிக்காடும். மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நடக்க விடுதி உரிமையாளர்கள் தயாராக உள்ளோம். குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமையான வாக்களிப்பு உரிமையை பயன்படுத்தாமல் இருக்க நாங்கள் ஒரு போதும் துணை நிற்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.