ஜெய்ப்பூர்

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் டி 20 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் பெற்ற முதல் வெற்றிக்கு வீரர் ஸ்ரேயாஸ் கோபாலின் கூக்ளி பந்து வீச்சு பெருமலவில் உதவி உள்ளது.

ஐபிஎல் 2019 லீக் ஆட்டத்தில் நேற்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் ராஜஸ்தான் ராயல் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இது அந்த அணியின் சரியான நடவடிக்கை என ரசிகர்கள் பாராட்டினர் அந்த பாராட்டை மெய்ப்பிப்பது போல் அணியின் பந்து வீச்சு அமைந்தது.

குறிப்பாக ஸ்ரேயாஸ் கோபால் தனது கூக்ளி பந்து வீச்சின் மூலம் ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. இந்த நான்கு விக்கட்டுகளில் ஸ்ரேயாஸ் கோபால் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்ரேயாஸ் கோபாலிடம் முதலில் ஆட்டமிழந்த இந்திய அணி மற்றும் பெங்களூர் அணி தலைவருமான விராட் கோலி 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டான ஷிம்ரான் ஹெட்மியர் வெறும் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இரண்டாம் பகுதியில் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 59 ரன்கள் எடுத்தார். இந்த அணிக்கு வெற்றி இலக்காக 159 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணி தனது 19.5 ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்றதாக அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல் வீரர்கள் இந்த தொடரின் முதல் வெற்றியை நேற்று பெற்றுள்ளனர்.