உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.
முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.
அவரின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்திருப்பதாவது:
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கையாக நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் உண்மை தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.
‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன்.