சென்னை:

மிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை  80 கோடி ரூபாய் பணம், 132 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு  ரூ.212 கோடி என்று  தமிழக தலைமை தேர்தல் ஆணையர்  சத்ய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று இரவு சென்னை வருகிறார். நாளை முதல் 2 நாட்கள் தமிழகத்தில் முகாமிடும் அவர், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளிடையே ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக தேர்தல் ஆணையம், நாளை காலை 10 மணி முதல் 11:30 மணிவரை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும்,  11:30மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும்,  நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறினார்.

அதே போல் 11:15 மணிக்கு தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, நேற்று மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுவரை மொத்தமாக 80 கோடியே 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  132 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் 468 கிலோ, ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி 414 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

வேலூரில் வருமானவரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த சத்யபிரதாசாஹு இதுவரையில் அறிக்கை ஏதும் வரவில்லை என்றார். அறிக்கை பெறப்பட்ட பின்னர், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அதிகாரிகள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.