லிகர்

பாஜக தொண்டர்களிடம் ராஜஸ்தான் ஆளுநர் கல்யான் சிங் மோடியை ஆதரித்து பேசியதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

அலிகர் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் கல்யாண் சிங் உத்திரப் பிரதேச மாநில அமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார். கல்யாண் சிங் உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியின் அடிப்படையில் பாப்ரி மசூதி கரசேவைக்கு 1982 ஆன் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. இவர் வாக்குறுதியை மீறி அப்போது பாப்ரி மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அதன் பிறகு பாஜகவை விட்டு விலகிய கல்யாண்சிங் தனிக்கட்சியை தொடங்கினார். அதைக் கலைத்து விட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அங்கிருந்தும் விலகி கடந்த 2014 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனினும் ராஜஸ்தான் ஆளுநராக பதவி வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் ஆளுநராக 2014 முதல் பதவி வகித்து வரும் கல்யாண்சிங் அடிக்கடி தனது சொந்த ஊரான அலிகர் வந்து தங்குவது வழக்கம்.   சமீபத்தில் நடந்த வேட்பாளர் அறிவிப்பினால் அதிருப்தி அடைந்த பாஜக தொண்டர்கள் இவர் வீட்டின் முன் கூடி புகார் அளித்தனர்.

அவர்களிடம் கல்யாண்சிங், “பாஜக தொண்டர்களாகிய நாம் பாஜக வென்று மோடி மீண்டும் பிரதமராக விரும்புகிறோம்” என தெரிவித்தார். அவர் பேசியது வீடியோ பதிவாக்கப்பட்டு வைரலானது. கட்சி சார்பற்று இருக்க வேண்டிய ஆளுநர் மோடியை ஆதரித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.

தேர்தல் ஆணையத்திடம் கல்யாண்சிங் பேச்சு குறித்து புகார்கள் குவிந்தன. அதை ஒட்டி அலிகர் நகராட்சியிடம் இந்த வீடியோ குறித்து விசாரித்த ஆணையம் வீடியோ உண்மையானது என உறுதி செய்துள்ளது.

ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசியது தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆளுநர் பதவிக்கு சிக்கல் வரலாம் என கூறப்படுகிறது.