சென்னை:
வேலூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த தமிழக தேர்தல் ஆணையர், வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று கூறி உள்ளார்.
வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளரு மான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த 30ந்தேதி, துரைமுருகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் உடன் வருமானவரித் துறையினரும் சோதனை நடத்தினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் பழிவாங்கல் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடி சோதனையை வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர். துரைமுருகனின் கல்லூரி, பள்ளிகள் உள்பட, அவருக்கு நெருக்கமானவர்களிடமும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின்போது, வேலூரை அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக பகுதி செயலாளர் சீனுவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று காலை முதலே காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவருக்கு சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 9 கோடி ரூபாய் அளவிலான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வார்டு எண், தெரு பெயருடன் கவரில் பணம் போடப்பட்டும், அது வார்டு வாரியாக பிரித்து வைக்கப்பட்டருந்ததும், அத்துடன் அந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
இதனிடையே சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மிஷினை வைத்து பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சாஹு வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கையை, தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைப்போம். அவர்கள்தான முடிவு செய்ய வேண்டும். தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என்றார்.
மேலும், தங்களுக்கு கிடைத்த ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையிலேயே சோதனை நடை பெற்ற தாக தெரிவித்தவர், மார்ச் 31ந்தேதி (நேற்று) வரை பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.78.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், 328 கிலோ தங்கம் மற்றும் 1.68 கோடி மதிப்பிலான 409 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.