காட்பாடி:
காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்எல்ஏ மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தனது மகனுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் ஐடி நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துரைமுருகன் வீட்டுக்கு வந்த நான்கு பேர் தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அடுத்து மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் துரைமுருகனின் வழக்கறிஞர் கேட்டதற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும் தேர்தல் பார்வையாளர்கள் என்றும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு நேரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் போலீசுக்கு தெரிய போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். அதேபோல் கட்சியினரும் அதிக அளவில் துரைமுருகன் வீடு முன்பு குவிய தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி துரைமுருகன் வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, `மத்திய-மாநில அரசுகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. துரைமுருகன் உடல்நிலை மோசமாக இருக்கிறார். சதித் திட்டம் தீட்டி அவரை, வேண்டுமென்றே தொந்தரவு செய்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் சோதனையை நாங்கள் முறியடிப்போம்’’ என்றனர். தி.மு.க-வினர் ஏராளமானோர் துரைமுருகன் வீட்டு முன்பு திரண்டுள்ளனர். போலீஸாரும் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.