பொள்ளாச்சி

பொள்ளாச்சி காவல்நிலையத்தின் சிசிடிவி பதிவை கேட்டவருக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள நல்லாம்பள்ளி என்னும் ஊரை சேர்ந்தவர் எம் முத்துமணி.   இவர் பொள்ளாச்சி காவல்நிலையத்தின் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 முதல் 21 ஆம் தேதி வரையிலான கண்காணிப்பு காமிரா (சிசிடிவி) பதிவை தமக்கு வழக்குக்காக அளிக்க வேண்டும் என காவல்நிலையத்துக்கு கோரிக்கை விடுத்தார்.

காவல்துறை அந்த பதிவில் காவல்நிலைய ஆயுதங்களின் அறை உள்ளிட்ட பல பதிவுகள் உள்ளதால் அதை அளிக்க மறுத்து விட்டது.  அதை எதிர்த்து அவர் கோவை கூடுதல் சூப்பிரண்ட் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்தார்.    அங்கும் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.   அதை ஒட்டி அவர் மாநில தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தார்.

அந்த மேல் முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தட்சினாமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் முத்துமணி தாம் அந்த காவல்நிலையத்துக்கு வந்ததற்கான ஆதாரம் தேவை என்பதால் உடனடியாக பதிவுக்கு விண்ணப்பித்தும் அந்தப் பதிவு தமக்கு அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கூடுதல் காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரி அந்த பதிவுகள் காவல்நிலையத்தில் இருக்குமானால் அளிப்பதாக உறுதி கூறினார்.  இதை ஒட்டி தகவல் ஆணையர் தட்சினாமூர்த்தி, “மனுதாரர் தாம் காவல்நிலையத்துக்கு வந்து சென்ற மூன்று தினங்களுக்குள்ளாகவே இந்த பதிவு தேவை என விண்ணப்பித்துள்ளார்.  அதனால் அந்த பதிவை பத்திரமாக வைக்க வேண்டியது காவல்துறை கடமை ஆகும்.

மனுதாரர் கேட்கும் பதிவை உடனடியாக அவருக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிடுகிறது.   அத்துடன் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களின் சிசிடிவி பதிவுகளும் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடியும் வரை பத்திரமாக வைக்கப்பட வேண்டும். ” என உத்தரவிட்டுள்ளார்.