அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூப் அப்துல்லா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் ரெட்டிமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார்.
காங்கிரஸ் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின்னர், தன்னை ஆந்திர முதல்வராக்கினால் ரூ.1500 கோடி தருவதாக காங்கிரஸ் கட்சியிடம் ஜெகன்மோகன் ரெட்டி பேரம் பேசினார் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பகீர் தகவல்களை தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் என தனித்தனியாக 4 முனை போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற தெலுங்கு தேசத்துக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய எதிர்க்கட்சி தலைவர்களை கொண்டு வந்து ஆந்திராவில் இறக்கி வருகிறார். அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, ஒன்றுபட்ட ஆந்திர மாநிலமாக இருந்த போது, தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காலமான பின்னர், எனது வீட்டிற்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை ஆந்திராவின் முதல்வராக்கினால் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1500 கோடி தர தயாராக இருப்பதாக பேரம் பேசினார்.
அவருக்கு அவ்வளவு பணம் எப்படி கிடைக்கும். அவரிடம் புதையல் கூட கிடையாது, அது கண்டிப்பாக மக்களின் பணம் தான். அப்படிப்பட்டவர்கள் உங்களது எதிர் காலத்தை பிரகாசமாக்கு வோம் என உறுதி அளித்து வாக்கு கேட்டால் அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களது வாழ்க்கையை அழித்து விடுவார்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஜெகன் ஒரு ஊழல்வாதி என தெரிவித்த பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் மேற்கொண்டார்.
பரூப் அப்துல்லாவை தொடர்ந்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.