வாஷிங்டன்

டந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை பயங்கர வாதம் செய்த நாடாக அறிவிக்க வங்கதேசம் ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் என இரு பிரிவாக இருந்தது. கடந்த1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் புரட்சி வெடித்தது. அந்த புரட்சியை அடக்க பாகிஸ்தான் ராணுவம் 1971 ஆம் வருடம் மார்ச் 25 ஆம் தேதி கடுமையான வன்முறை தாக்குதல் நடத்தியது. கண்ணில் பட்ட மக்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஏராளமானோர் அகதிகளாக குடி பெயர்ந்தனர். அதன் பிறகு இந்தியா உதவியுடன் வங்க தேசம் அமைந்த போதும் மக்கள் தங்கள் துயரங்களை மறக்கவில்லை. இதை ஒட்டி வங்க தேசம் ஐநா சபையிடம் பாகிஸ்தானை பயங்கரவாதம் செய்த நாடாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இது குறித்து வங்கதேச ஐநா சபை பிரதிநிதி மசூத் பி மோமென் குழுக்கூட்டத்தில் பேசி உள்ளார்.

மசூத் பின் மோமென், “நாங்கள் பாகிஸ்தானை குறித்து எங்கள் நாட்டு அளவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அமைந்துள்ள அரசு இவ்வாறு உள்நாட்டுப் போர் குறித்து கிரிமினல் வழக்கு நடத்த உள்ள்து. கடந்த 1971 ஆம் வருடம் மார்ச் 25 ஆம் தேதி வங்கதேசத்தில் பயங்கரவாதம் நிகழ்ந்த நாள்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆபரேஷன் செர்ச்லைட் என்னும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குறிப்பாக டாக்கா நகரில் கொடுமையான தாக்குதல் நடத்தினர். பலர் குறி வைத்து கொல்லப்பட்டனர். ஒரு இரவு முழுவதும் மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். சமுதாயத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவுஜீவிகள், மதவாதிகள் மற்றும் காவல்துறையில் உள்ளவர்கள் என அனைத்து பிர்வினரும் பாகுபாடின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். டாக்கா நகரமே ஒரே இரவில் மரண நகரம் ஆனது,

அந்த கொடூர தாக்குதல் நாங்கள் சுதந்திரம் அடைந்தாக வேண்டும் என எங்கள் மனத்தில் எண்ணைத்தை உண்டாக்கியது. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு 1971 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சுதந்திரம் அடைந்தோம். பாகிஸ்தான் ராணுவம் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தது. உலக வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டதில்லை. அதனால் நாங்கள் ஐநா சபையிடம் பாகிஸ்தானை எங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய நாடு என அற்விக்க கோரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த பிரிட்டன் பத்திரிகையாளர் ஆண்டனி மாஸ்கரெனாஸ் என்பவர் இந்த தாக்குதல் குறித்த தகவலை முதலில் சர்வதேச ஊடகங்களுக்கு அளித்தவர் ஆவார். அவர் இது குறித்து, “என்னிடம் ஒரு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இது சுத்தமானவர்களுக்கும் அசுத்தமானவர்களுக்கும் இடையில் நடந்த போர் எனவும். இங்குள்ளவர்கள் தங்களை இஸ்லாமியர் என அழைத்து இஸ்லாமியப் பெயர்களை வைத்துக் கொண்டுள்ள போதிலும் மனதளவில் இந்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி  இஸ்லாமியர்களை அவர்களீடம் இருந்து பிரித்து தங்களுடன் வசிக்க இந்த போரை நிகழ்த்தியதாக அப்போது கூறினார்.” என தெரிவித்தார்.