டில்லி:

சென்னை கதிட்ரல்  சாலையில் உள்ள செம்மொழிப் பூங்கா தொடர்ந்து செயல்படலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.  நில உரிமையாளரின் மனுவை தள்ளுபடி செய்தது.

திமுக ஆட்சியின்போது, 2010ம் ஆண்டு சென்னை கதிட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்கா அமைந்திருந்த இடத்தில் ஏற்கனவே அங்கு தனியார் ஹோட்டல் இயங்கி வந்தது. அதை பொது மக்கள் ஓய்வுவெடுக்க வசதியாக தமிழக அரசு கைவசப்படுத்தி செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

அந்த இடத்தில் பிரமாண்டமான செம்மொழிப் பூங்கா உருவாக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 24-11-2010 அன்று திறக்கப்பட்டது.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, கருணாநிதி மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக செம்மொழி என்ற பெயரை மறைந்து வெறும் பூங்கா என மாற்றியது. அதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு சொந்தக்காரர் என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் நிலத்துக்கு உரிமை கொண்டாடி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், செம்மொழிப் பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான செயல்பாடுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து செயல்படலாம் என்றும் உத்தரவிட்டது.