சென்னை:
கடந்த 5ஆண்டுகளில் பிரேமலதாவின் தம்பி எல்.கே.சுதீசின் சொத்து மதிப்பு 336 சதவிகிதம் அதிகரித்துள்ளது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையறிந்த தேமுதிகவினரும், பொதுமக்களும் அடேங்கப்பா என வாயை பிளக்கின்றனர்…பதவியில் இல்லாதபோதே இவ்வளவு சொத்து அதிகரித்தது எப்படி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…
நடிகர் விஜயகாந்தின் கட்சியான தேமுதிகவில், அவரது மனைவி பிரேமலதா பொருளாளராக இருந்து வருகிறார். அவரது தம்பி எல்.கே.சுதீஷ் தேமுதிகவின் துணைப்பொதுச்செயலாளராக உள்ளார். தற்போது கள்ளக்குறிச்சியில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார்.
இவர் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுடன் அவரது சொத்து மதிப்பும் தாக்கல் செய்யப்பட்டது.
அதுபோல தற்போது, வேட்புமனு தாக்கல் செய்துள்ள மனுவுடனும் அவரது சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கடந்த 2014ம் ஆண்டைய சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது, அவரது சொத்து மதிப்பு 336 சதவீதம் உயர்ந்துள்ளது.
அவர் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில், தனது பெயரிலும் தனது குடும்பத்தின் பெயரிலும் 60 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்றும், இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.17.18 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.42.99 கோடி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டைய அவரது சொத்துமதிப்பு 33 கோடியே 91 லட்சமாக இருந்தது. அப்போதைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அவரின் சொத்து மதிப்பு 77 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக அசையாக சொத்துகளின் மதிப்பு 336% அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் சுதீஷ் வருமான வரித் தாக்கல் செய்யும்போது 2013-14-ம் நிதியாண்டு மற்றும் 2017-18-ம் நிதியாண்டில் தன்னுடைய வருமானம் 53% குறைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியிலோ, பதவியிலோ இல்லாதபோது எல்.கே.சுதீசுக்கு இவ்வளவு சொத்து மதிப்பு கூடி யிருப்பது தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாத பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.