சிவகங்கை தவிர தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிறுபான்மையினர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொந்தளிப்போய் இருப்பது கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் தான். அந்த மாவட் டத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் 4 பிஷப்புகள், முகில் வாஸ்னிக் தரப்பிடம் ‘இந்த தொகுதியில் கிறிஸ்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்று கடிதம் எழுதி வலியுறுத்தினர்.
ஆனாலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற வசந்தகுமாருக்கே காங்கிரஸ் டிக்கெட் கொடுத்துள்ளது. இந்த தொகுதியில் தனித்து நின்ற காங்கிரஸ் கடந்த தேர்தலில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகள் பெற்று 2 ம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
இந்த மக்களவை தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
கன்னியாகுமரி தொகுதி கடந்த 2009 ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நாகர் கோவில் தொகுதியாக இருந்தது. இந்த முறை பா.ஜ.க.சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
டி.டி.டி.தினகரனின் அ.ம.மு.க.சார்பில் களம் இறங்குகிறார் லட்சுமணன்-. அவர் மனைவி- மீனவ குடும்பத்தை (பெர்ணாண்டஸ்)சேர்ந்தவர். இந்த தொகுதியில் நான்கரை லட்சம் சிறுபான்மையினர் ஓட்டுகள் உள்ளன.
வெற்றி பெறுவது யார்?
சிறுபான்மையினர் ஊசலாட்டத்தில் இருப்பதால்- மனைவி மூலம் அவர்கள் ஓட்டுகளை வளைக்கும் முயற்சியில் இருக்கிறார்- லட்சுமணன்.
யாருக்கு வாக்களிப்பது என்பதை கிறிஸ்தவர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.
பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டால் –அதனை தடுக்க அவர்கள் வசந்த குமாருக்கு வாக்களிக்ககூடும்.
இன்றைய தேதியில் அங்கு கடும் போட்டி நிலவுவதே கள நிலவரம். யார் வென்றாலும் சில ஆயிரங்களில் தான் ஓட்டு வித்தியாசம் இருக்கும்.
கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய ஓட்டு விவரம் இது:
பா.ஜ.க.: 3,72,906
காங்கிரஸ்:2,44,244
அ.தி.மு.க:1,76,239
தி.மு.க:1,17,993
–பாப்பாங்குளம் பாரதி