டில்லி

பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, கல்ராஜ் மிஸ்ரா, பகத்சிங் கோஷ்யாரி உள்ளிட்ட பலருக்கு தேர்தல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அரசு அமைத்தது.   அப்போது 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.   பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் இருந்து  மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டனர்.

தன் பிறகு மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாராளுமன்ற வழிகாட்டிகள் குழு என்னும் புதிய குழு அமைக்கப்பட்டு அதில் இணைக்கப் பட்டனர்.  ஆனால் இந்த குழு ஒரு முறைகூட கூட்டப்படவில்லை.   அது மட்டுமின்றி பொதுவாகவே கட்சியில் எவ்வித நடவடிக்கைகளையும் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி எடுக்கப் படுவதில்லை என பலர் குறை கூறி வந்தனர்.

நேற்று பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.  இதில் அத்வானி தொடர்ந்து வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதியில் அவருக்கு பதிலாக அவருடைய தேர்தல் உதவியாளரும் தற்போதைய பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முரளி மனோகர் ஜோஷி குறித்து இதுவரை அறிவிப்பு வரவில்லை.

அது மட்டுமின்றி பாஜக மூத்த தலைவர்களான கல்ராஜ் மிஸ்ரா, மற்றும் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.   அவர்கள் தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நேற்று வெளியான பட்டியலில் இது போல பல மூத்த தலைவர்கள் பெயர் இடம் பெறாதது பாஜக தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.