சென்னை:
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துஉள்ளது.
உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி)யின் தேசிய செயற்குழு கூட்டம் உ.பி.யில் நடைபெற்றது. இதில், தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுமாறும், தான் பிரசாரத்திற்கு வருகிறேன் என்று மாயாவதி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து 40 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள பிஎஸ்பி கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.