சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், இன்று மரியாதை நிமித்தமாக  தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் உருவாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அதிமுக தலைமையில் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது/ இந்த சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தன

விஜயகாந்துடன் நடந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை, சாதாரண கட்சி உறுப்பினர் முதல் பிரதமர் மோடி வரை அவரது வீட்டுக்கு சென்றுதான் சந்தித்து வந்தனர். ஆனால்,  தற்போது, அதிமுகவின் நிலைமை தலைகீழாக மாறி கூட்டணிகளை தேடி அவர்களின் கட்சித்தலைவர்களின்  காலடியில் சரணடைந்து கிடக்கிறது… இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.