சென்னை:

திட்ட அனுமதி இல்லாமல், விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே  மூட தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் விவசாய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக அந்த மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நல்லசாமி என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,  விவசாய நிலத்தில்  செயல்பட்டு வரும்  டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும்,  டாஸ்மாக் கடை அருகே விவசாயம் நடைபெறுவதாகவும் அதன் காரணமாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை உயர்நீதி மன்ற  நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழகம் முழு வதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை? டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டு உள்ளதான என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இன்றைய விசாரணையின்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் செயல்படும் மூன்றாயிரம் டாஸ்மாக் கடைகளில் தற்போது சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் தற்போதைய நிலையில், விவசாய நிலங்களில் திட்ட அனுமதி பெறாமல்  110  டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாகவும்  தெரிவித்தார்.

இதையடுத்துவிவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளதாக கூறியவர்,  திட்ட அனுமதி இல்லாமல் விவசாய நிலத்தில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.

மேலும் கடைகளை மூடியது குறித்து  வரும் திங்களன்று நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய  உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.