கொல்கத்தா
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஒப்பந்த விமானங்கள் மூலம் பணம் எடுத்து செல்லப்படுவதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக ஒவ்வொரு தேர்தலிலும் புகார்கள் எழுகின்றன. இதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பலமுறை ரொக்கப்பணம் பிடிபட்டுள்ளது. அத்துடன் சமீபத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுவகைகளும் பிடிபட்டுள்ளன.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான பணத்தை கட்சிப் பிரமுகர்கள் ஒப்பந்த விமானம் (CHARTERED FLIGHTS) மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் செல்கின்ரனர். எனவே தேர்தல் ஆணையம் கட்சி பிரமுகர்கள் செல்லும் விமானங்களையும் சோதனை இட வேண்டும்.
அது மட்டுமின்றி பாஜகவினர் இந்திய ராணுவத்தினர் புகைப்படங்களையும் ராணுவ நடவடிக்கைகளையும் தொடர்ந்து பிரசாரத்தில் பயன்படுத்துகின்றனர். உடனடியாக அந்த பானர்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி அரசின் சாதனைகள் என்னும் விளம்பரங்கள் இன்னும் திரையரங்குகளில் ஒளிபரப்ப படுகின்றன. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடும். அதன்படி இந்த விளம்பரப் படங்களை அரசு நிறுத்தி இருக்க வேண்டும். இது குறித்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.