சென்னை:
தமிழக மக்களை குலைநடுங்க வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் கொடூர சம்பவங்கள் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர சம்பவங்களின் பின்னணியில் திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரணை செய்து வரும், நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய பணம் பறிந்து வந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரமான சம்பவங்களுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, மக்கள்நீதி மய்யம், கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி டிஎஸ்பி பாண்டியராஜ் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்து வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் அதிமுகவினர் பலர் சிக்கி உள்ள நிலையில், அவர்களை காப்பாற்றும் நோக்கில், இதற்கும் அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இல்லை என்று பூசி மெழுகி வருகிறார்.
இதன் காரணமாக, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு வந்தது. இது நடைபெற உள்ள தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்த தமிழக அரசு, சிபிஐக்கு மாற்றக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. மத்திய உள்துறையும் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து,. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.