சென்னை:
சட்டவிரோத பண பரிமாற்றம்முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
திமுக முன்னாள் அமைச்சரான மறைந்த கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.78 கோடி பணம் உரிய ஆவணங்கள் இன்றி அனுப்பியதாக கடந்த 2016ம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. இதற்கான ஆவனங்கள் அவர் தாக்கல் செய்யயாத நிலையில், முறைகேடாக பணம் சம்பாதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகளிலிருந்து, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 78 கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ளது நிரூபணமானது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்தார். . அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
கருப்பு பண விவகாரத்தில் தமிழகத்தில் முதன்முறையாக தற்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் திமுக முன்னாள் அமைச்சர் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.
கோ.சி.மணியின் மகன் அன்பழகன் ஏற்கனவே சென்னை புழல் சிறையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.