சென்னை:
தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் உறுப்பினராக உள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளளார்.
உச்சநீதி மன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டு உள்ளது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், சட்டமன்ற சபாநாயகர், முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெறுவர். இவர்களை இணைந்து லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தா,பல்லும் இல்லாத, பவரும் இல்லாத , அச்சடித்த பதுமை போன்றுள்ள தமிழக லோக் ஆயுக்தா என்று விமர்சித்த ஸ்டாலின், ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், இன்று நடைபெற்ற 2வது கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்.
லோக்ஆயுக்தா குழுவால் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட தேடுதல் குழு லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்கள் இடம்பெறுவது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தகுதி வாய்ந்த 183 பேரிடம் நேர்காணல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அறிக்கை லோக்ஆயுக்தா குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆலோசிக்க இன்று கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பட்டது. ஆனால், அவர் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.