கடந்த 50 ஆண்டுகளாக தமிழக தலைநகர் சென்னை தி.மு.க. கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலும் ,கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலும் விதி விலக்கு.
1991-ல் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையால் –சென்னை மட்டு மல்லாது தமிழகம் முழுவதுமே தி.மு.க. அடித்து செல்லப்பட்டது.
தலைநகரில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை ,தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
1996- 1998.1999.மற்றும் 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் சென்னையின் 3 தொகுதிகளையும் தி.மு.க.அள்ளியது.
2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தென் சென்னையில் அ.தி.மு.க.வெல்ல- மற்ற இரு தொகுதி களிலும் தி.மு.க.வென்றது.
நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும்- கடந்த தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வென்று –சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற வாதத்தை அடித்து நொறுக்கியது.
இந்த முறை எப்படி இருக்கும்?
தி.மு.க.மீண்டும் ஜெயிக்கும் வாய்ப்புகளே அதிகம்.
ஏன்?
தென் சென்னையில் மட்டுமே இந்த முறை அ.தி.மு.க.போட்டியிடுகிறது. வட சென்னையை பா.ஜ.க.வுக்கும், மத்திய சென்னையை தே.மு.தி.க.வுக்கும் தள்ளி விட உத்தேசித்துள்ளது-அ.தி.மு.க.
தி.மு.க. வேட்பாளர்களாக தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதிமாறனும், வட சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
கூட்டணி பலத்தால்- இவர்களின் வெற்றியும் அநேகமாக உறுதி என்றே சொல்லலாம்.
-பாப்பாங்குளம் பாரதி