புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதிக்குள் அமைந்த சீக்கியர்களின் புனித தலங்களுள் ஒன்றான கர்தார்பூர் காரிடாருக்காக, இந்தியா, கலைநயமிக்க பயணிகள் முனையம் ஒன்றை கட்டவுள்ளது.

சுமார் ரூ.199 கோடி செலவில் இந்த பயணிகள் முனையம் கட்டப்படவுள்ளது. இந்த புனித தலத்திற்கு வருகைதரும் யாத்ரிகர்கள் மற்றும் பயணிகளின் பலவிதமான அடிப்படைத் தேவைகளையும் ஈடுசெய்யும் வகையில் இந்த முனையம் கட்டப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான ஒரு விரிவான கட்டுமான திட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கிவிட்டது. அதேசமயம், இதுகுறித்து கடந்த 2018ம் ஆண்டே அமைச்சரவைக் கூடி முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுமானப் பணியை, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் அவர்களின் 550 வது பிறந்தநாள் விழா வருவதற்கு முன்னரே (அதாவது, நவம்பர் 2019) முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. மத நம்பிக்கைகள் புண்படாத வகையில், கட்டுமான வடிவமைப்பு மற்றும் தரம் போன்றவை முடிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுமானத்திற்காக, 50 ஏக்கர் அளவிலான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது மற்றும் அது இரண்டு கட்டங்களாக மேம்படுத்தப்படவுள்ளது.

– மதுரை மாயாண்டி