புதுடெல்லி:
கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு பேட்டியளித்த அவர், “ஒரே நபர் பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுகின்றனர். தகுதியான நபர்களுக்கே கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்.
மாறாக, பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு டாக்டர் பட்டத்தை கொடுத்து வியாபாரமாக்கக் கூடாது.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, விதிமுறைகளை உருவாக்கி தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில் ரீதியான நன்னடத்தை, தார்மீக, நியாயத்தின் அடிப்படையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் செயல்பட்டு, தகுதியானவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.
இதில் வெளிப்படைத் தன்மை,நேர்மை இருக்க வேண்டும். எனினும், கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது ஒழுங்குபடுத்தப்படும்” என்றார்.