இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மண்ணில் எந்த தீவிரவாத இயக்கமும் செயல்பட தனது அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “தேசிய நடவடிக்கை செயல்திட்டத்தின் (NAP) கீழ், எந்தவித ஆயுதந் தாங்கிய குழுவும் பாகிஸ்தானில் செயல்பட அனுமதிக்கப்படாது. எந்த நாடும் இப்படி அனுமதியாது.
எங்கள் அரசாங்கம் பொறுப்பேற்றபோதே, இந்த தேசிய நடவடிக்கை செயல்திட்டத்தை அமல்படுத்திட வேண்டுமென நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். பாகிஸ்தானின் மண்ணை ஒருபோதும் தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள முடியாது” என்றார்.
பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளால், காஷ்மீரில் துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, தீவிரவாத குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்நாட்டிற்கு, சர்வதேச தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டின் சமீபத்திய நடவடிக்கைளில், பல தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளதோடு, சில அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் முன்னரே திட்டமிடப்பட்டவைதானே ஒழிய, எந்த அரசியல் நெருக்கதலின் அடிப்படையிலும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
– மதுரை மாயாண்டி