நாசிக்:

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 முஸ்லிம்களை நாசிக் தடா நீதிமன்றம் விடுதலை செய்தது.


கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்து மும்பை கலவரமும் நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்க உறுப்பினர் கான் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து, அரசு அலுவலகங்கள் மீதும் மற்றும் பாபர் மசூதி இடிப்புக்கு பழி வாங்க இந்துக்கள் மீதும் குண்டு வெடிப்பு நிகழ்த்த வனப் பகுதியில் திட்டமிட்டதாக புஷாவல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பிஹெச்டி படித்த ஒருவர், 6 முறை கவுன்சிலராக இருந்த ஒருவர், 3 டாக்டர்கள், ஒரு என்ஜினியர் அடங்குவர்.

இவர்கள் மீது 25 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில், குற்றமற்றவர்கள் என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து நாசிக் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மவுலானா அப்துல் காதிர் ஹாபிபி பிஹெச்டி படித்தவர். அப்போதைய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராமுடன் இணைந்து தடாவை எதிர்த்துப் போராட்ட நடத்திய போது தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட டாக்டர் யூனஸ் ஃபலாகி கூறும்போது, “கடவுளின் கிருபையால் நான் மருத்துவராகியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது ஒருவரது உயிரை எடுக்க நான் எப்படி காரணமாவேன்” என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி விடுதலை செய்ததும் 11 பேரும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டனர்.