ஸ்ரீநகர்:
இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியது.
அதன்பின்னர் பாகிஸ்தானுக்குள் சென்று, அந்த அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படையினர் அழித்தனர்.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயும் போர் பதற்றம் நிலவுகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயும் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் எல்லை தாண்டி செய்து வந்த வர்த்தகம் நிறுத்தப்பட்டது. யூரி தாக்குதலுக்கு முன்பு இரு நாடுகளின் எல்லையிலும் பொருட்களை பண்டமாற்று செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது.
இதற்கிடையே, உயர் அதிகாரி ரியாஜ் அகமது மாலிக் கூறும்போது, “பண்டமாற்று வர்த்தகத்துக்காக இரு நாட்டு எல்லையும் திறக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் 35 சரக்கு லாரிகள் சென்றுள்ளன.
அதே எண்ணிக்கையிலான லாரிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. எல்லைப் பகுதியில் நடக்கும் இந்த வர்த்தகத்தில் பண பரிவர்த்தனை இருக்காது. பொருட்கள் மட்டுமே மாற்றிக் கொள்ளப்படும்” என்றார்.
காஷ்மீர் வர்த்தக அமைப்பு தலைவர் பவான் ஆனந்த் கூறும்போது, “நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த பண்டமாற்று வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. நாங்கள் பாகிஸ்தான் வர்த்தகர்களை பார்ப்பதுவுமில்லை, பொருட்களை சோதிப்பது இல்லை” என்றார்.
ஸ்ரீநகரைச் சேர்ந்த வர்த்தகர் அஸ்ஃபாக் அகமது கூறும்போது, “பொருட்களின் விலையை பாகிஸ்தான் வர்த்தகரோடு வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்வேன்” என்றார்.