இஸ்லாமாபாத்: இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் மீதான கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டதாகவும், நாட்டில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 44 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலடைக்கப்பட்டவர்களின் பட்டியலில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர்களும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இயக்கம்தான், காஷ்மீரின் புலவாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட இயக்கமாகும்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுவதாவது, “தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தும் ஒரு செயல்தான், அரசின் சமீபத்திய நடவடிக்கைகள்.
இத்தகைய நடவடிக்கைகள் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்தவைதானே ஒழிய, இந்தியாவின் கோபத்தை தணிப்பதற்காக செய்யப்படுகிறது என்று கூறுவதில் உண்மையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத இயக்கங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சமீப நாட்களில் பாகிஸ்தானுக்கு, சர்வசேத தரப்பிலிருந்து கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி