காம்பூர், அசாம்
பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே நகைசுவையை உண்டாக்கி உள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. மறைந்த வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்து வந்தார். தற்போதைய பிரதமர் மோடி அந்த சமயத்தில் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். தாக்குதலை நடத்திய தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.
அசாம் மாநிலத்தில் நாகாவ் மாவட்டத்தில் உள்ள காம்பூரில் நேற்று முன் தினம் ஒரு பேரணி நடந்தது. பாஜக சார்பில் நடந்த இந்த பேரணியில் அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்துக் கொண்டார். அவர் தனது உரையில், “பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்து மோடியை பிரதமராக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். பாஜக அரசு இந்த குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
தற்போது இங்குள்ள சிலர் பாகிஸ்தான் வாழ்க என கோஷம் இடுகின்றனர். அதை ஒடுக்க வேண்டுமானால் நமக்கு மத்தியில் பாஜக அரசு அவசியத் தேவையாகும். ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கும். மீண்டும் அது போல் ஒரு தாக்குதல் நடைபெறக் கூடாது என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் நடத்த யாருக்கும் துணிச்சல் வராது” என குறிப்பிட்டுள்ளார்.
முன்பு பாராளுமன்ற தாக்குதல் நடந்த போது பாஜக ஆட்சி செய்து வந்தது என்னும் விவரம் அறியாமல் அவர் பேசியது மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அவருடைய இந்த உரையை குறித்து பலர் நகைச்சுவை பதிவுகளி பதிந்து வருகின்றனர்.