அமிர்தசரஸ்:
அகாலிதளம் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநிலம் பெரோஷ்புர் தொகுதி எம்.பி. சேர்சிங் குபாயா, (Sher Singh Ghubaya) இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில்,பாஜக அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, மொத்தம்உள்ள 13 லோக்சபா தொகுதிகளில், அகாலிதளம் கட்சிக்கு 10 இடங்களும், பாஜகவுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அகாலிதளம் கட்சி மீது அதிருப்தி அடைந்த சேர்சிங் குபாயா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிரோன்மணி அகாலி தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் இரண்டு முறை பெரோஷ்புர் தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை டில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதையடுத்து, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் குமார் ஜஹார், அகில இந்திய காங்கிரஸ் பஞ்சாப் பொறுப்பாளர் ஆஷா குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, பெரோஷ்புர் தொகுதியில் குபாயா மீண்டும் காங்கிரஸ் சார்பில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாஜக எம்.பி. சாவித்தி பாய் பூலே காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், 2வது எம்.பி.யாக தற்போது குபாயா இணைந்துள்ளார்.