புதுடெல்லி: தான் ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சிக்காக, வருத்தம் தெரிவித்திருப்பதன் மூலம், பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி.
ஏனெனில், அந்தத் தொலைக்காட்சியிடமிருந்து இதுபோன்ற மன்னிப்பு வெளியாவதெல்லாம் மிகவும் அபூர்வமான ஒன்று.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் மெளலானா ஜலாவுதீன் உம்ரியை தீவிரவாதியாக சித்தரித்து ஒளிபரப்பான நிகழ்ச்சியை ஒட்டி, அந்த செய்திச் சேனலுக்கு நாடு முழுவதிலுமிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் உள்பட, பல்வேறு முஸ்லீம் அமைப்புகளிடமிருந்தும் கடுமையாக கண்டனங்கள் எழுந்த சூழலில், மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒரு கடிதமும் எழுதப்பட்டது. இதனையடுத்தே, அந்தச் சேனலின் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான சிஎன்என் – நியூஸ்18 சேனல் மீதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. உலக முஸ்லீம்களின் 3 முக்கியப் புனித தளங்களான மெக்கா மசூதி, மெதினா மசூதி மற்றும் ஜெருசலேமிலுள்ள அல்-அக்சா மசூதி போன்றவற்றின் படங்களைக் காட்டி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் அசாரின் தீவிரவாத தொழிற்சாலையுடன் சம்பந்தப்படுத்தி, நிகழ்ச்சி ஒளிபரப்பியதாக கண்டனக் கணைகள் பாய்ந்துள்ளன.
ஆனால், அந்தச் சேனல் தரப்பில், தங்களின் செயலுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி