ரோம்: வேளாண்மையில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை ஒழித்து, முற்றிலும் இயற்கை முறையைக் கொண்டுவந்த காரணத்திற்காக, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கு, ஐக்கிய நாடுகள் அவையின் ‘எதிர்கால செயல்திட்ட விருது (Future Policy Award)’ வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக, உலகின் 25 நாடுகளிலிருந்து மொத்தம் 51 மாநிலங்கள் போட்டியிட்டபோதும், இமயமலையின் குட்டிக் குழந்தையான சிக்கிம், அனைவரையும் வீழ்த்தி, பரிசை தட்டிச்சென்று விட்டது.

ரோம் நகரில் நடைபெற்ற விழாவில், 2018ம் ஆண்டிற்கான இந்த விருதை, மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்தாஸ் ராய், இந்தியத் தூதர் ரீனத் சந்து ஆகியோர், மாநிலத்தின் சார்பாக பெற்றுக்கொண்டனர்.

சிக்கிம் மாநிலத்தின் இந்தக் கொள்கை, அதன் 66,000 வேளாண் குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் உதவியிருக்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் ராசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு, அவற்றின் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி 19ம் தேதி, சிக்கிமை இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலமாக அறிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

– மதுரை மாயாண்டி