கோலாலம்பூர்: 5 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய தலைநகரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது குறித்த உண்மைகளை வெளியிடுமாறு, விமானப் பயணிகளின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போயிங் 777 வகையைச் சேர்ந்த MH370 எனும் பெயர்கொண்ட அந்த விமானம், கடந்த 2014ம் ஆண்டு, கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங்கை நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்டது. பயணிகளை ஆசையோடு டாடா காட்டி வழியனுப்பி வைத்துவிட்டு, இல்லம் திரும்பினார்கள் அவர்களது உறவினர்கள்.

ஆனால், புறப்பட்ட விமானம் என்ன ஆனதென்றே இதுவரை தெரியவில்லை. விமானத்தை தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகவே போயின. 5 ஆண்டுகள் கடந்தும் புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது உலகின் மிகப்பெரிய விமான விபத்து மர்மமாக மாறிவிட்டது!

எனவே, மாயமாகிப் போனவர்களின் உறவினர்கள், மாதம் ஒருமுறை, கோலாலம்பூர் நகரில், ஒரு தேநீர் கடையிலோ அல்லது ஏதேனும் ஒரு வீட்டிலோ சந்தித்து, ஒருவரை ஒருவர் தேற்றி, ஆறுதல்படுத்திக் கொண்டு, தங்களின் மீதமுள்ள வாழ்க்கையை நகர்த்தும் பொருட்டு, சக்தியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக அப்படியே இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்குமாறு, அவர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

– மதுரை மாயாண்டி