திருப்பூர்:
தனது கணவர் அதிகாலை எழுந்த உடனேயே சென்று மதுகுடித்து வருகிறார் என்று கூறி, டாஸ்மாக் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினார் இளம் பெண் ஒருவர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக அரசு மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்குத்தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடை திறந்து வைக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பலர் எழுந்தவுடனேயே காபி, டீக்கு பதிலாக மதுவை வாங்கி குடித்து அதற்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தனது கணவர் தினமும் காலையிலேயே மது குடிக்கிறார் என்று திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடை முன்பாக இளம்பெண் ஒருவர் தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரசுக்கு எதிராகஆவேசமாக பேசிய அவர், அதிகாலையிலேயே டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மதுபானக்கடை விதிகளை மீறி காலை 5 மணிக்கே திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், தன்னுடைய கணவர் தினமும் காலையிலேயே மது அருந்தி விடுவதால், அவர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல செல்வதில்லை. இதன் காரணமாக தமது குடும்பம் வறுமையில் வாடி வருவதாக கண்ணீருடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த பகுதியில் கூலி வேலை செய்து வரும் ஏராளமானோர் குடும்பங்கள் தங்களைப்போலவே மதுபானத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன என்றவர், தான் கொண்டு வந்த கத்தியை கையில் வைத்து தர்ணாவில் ஈடுபட்டார். இதைக்கேள்விபட்ட பொதுமக்கள் சிலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர்.
இதையறிந்த காவல்துறையினர் உடடினயாக விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், அங்கே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை யும்.பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.