சென்னை:
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு தமிக முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது.இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:
இந்த நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் மோடி பல வெற்றிகளை பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்படுள்ளது பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் விடுத்துள்ள பாராட்டுச் செய்தியில், இந்திய விமானப்படை விமானிகளின் தனிச்சிறப்பு வாய்ந்த வீரச் செயல் பெருமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
சரியான நேரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்கள்.
புல்வாமாதாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் குடும்பதாருக்கு இந்த பதிலடி ஆறுதலாக இருக்கும்.
நடிகர் ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்தும் இந்திய விமானப் படை விமானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் Bravo India என்று கூறியுள்ளதோடு கரவொலி எழுப்பப்படுவது போன்ற வரைபடத்தையும் பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்,
போர்மீது விருப்பமில்லை.
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் – என பதிவிட்டுள்ளார்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
பாகிஸ்தானிற்குள் சென்று இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி இருப்பது, வரலாற்றில் முக்கியமான தருணம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்கள் பெருமை கொள்ளும் தருணம் இது என்று தெரிவித்தார்.