முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அகபர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பத்திரிகையாளார் பிரியா ரமணிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தன்னிடம் எம்.ஜே.அக்பர் தவறாக நடந்துக் கொண்டதாக மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பிரியா ரமணி குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
40 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவித்தனர். அதில் குறிப்பாக மிண்ட் லாங்க் பத்திரிகை ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஹாலா உள்ளிட்ட பலரும் பாலியல் புகார் தெரிவித்தனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும், ஆதாரமற்றவை என்றும் தெரிவித்த எம்.ஜே. அக்பர் பத்திகையாளார் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால் அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பிரியா ரமணியை விசாரணைக்காக ஆஜராகும்படி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் பிரியா ரமணி ஆஜரானார். அவரை விசாரித்த நீதிமன்றம் பிணைத் தொகையாக ரூ.10,000 செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. அடுத்த விசாரணை மார்ச் 8ம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே தனக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து பேசிய பிரியா ரமணி, “ இந்த வழக்கில் உண்மை எனது பாதுகாப்பு கவசமாக இருக்கும் “ என்றார்.